கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்கலேஷ்புராவில், ஒரு இளம்பெண் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியா முழுவதையும் அதிர வைத்துள்ளது. பெங்களூருவில் செவிலியராகப் பணியாற்றி வந்த 35 வயது ரம்யா, தனது மாமியாரின் ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக அத்திஹள்ளி கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (41) என்ற நபர், ரம்யாவிடம் பாலியல் ஆசை கூறி தொந்தரவு செய்துள்ளார். ரம்யா அதனை வன்மையாக மறுத்ததோடு, அவனை எச்சரித்தும் உள்ளார்.
தன்னை ஒரு பெண் எதிர்ப்பதா என்ற ஆத்திரத்தில், அந்த காமவெறியன் ரம்யாவை சரமாரியாகத் தாக்கியதோடு, அவரது பிறப்புறுப்பில் மிகக் கொடூரமாக எட்டி உதைத்துள்ளான். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரம்யாவை, உறவினர்கள் மீட்டு ஹாசன் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏப்ரல் 30-ம் தேதி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக இருந்த குற்றவாளி சந்துருவை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
