பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம் குமார், தனது வருமானத்திற்கு அதிகமாக 61% சொத்து சேர்த்ததாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு  அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பூர்ணியா, பாட்னா உட்பட ஆறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு மாடி சொகுசு வீடு, 25-க்கும் மேற்பட்ட நிலப்பத்திரங்கள் மற்றும் தார், கிரெட்டா போன்ற விலை உயர்ந்த வாகனங்கள் கண்டறியப்பட்டன.

1994-ல் காவல்துறையில் சேர்ந்த இவர், தனது பதவிக்காலத்தைப் பயன்படுத்திப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், கௌதம் குமாருக்கு மதுபானம், நிலக்கரி மற்றும் லாட்டரி மாஃபியாக்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாட்னாவில் ஒரு நர்சிங் ஹோம் கட்டத் திட்டமிட்டதுடன், நொய்டா, குருகிராம் மற்றும் சிலிகுரி தேயிலைத் தோட்டங்களிலும் இவர் முதலீடு செய்துள்ளார்.

இவரது மனைவி மற்றும் தோழியின் பெயரிலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வங்கிப் பரிமாற்ற ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வீரதீர விருது பெற்ற ஒரு உயர் போலீஸ் அதிகாரி, இவ்வளவு பெரிய ஊழல் புகாரில் சிக்கியுள்ளது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.