ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள உயர்நீதிமன்றம் அருகே நேற்று (செவ்வாய்) நான்கு வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தீ விபத்திற்குத் தானே காரணம் என ஒரு பெண் அதிரடியாக முன்வந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கவே நான் இப்படிச் செய்தேன்; பழைய துணிகளில் பெட்ரோல் ஊற்றிப் பற்றவைத்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஸ்கூட்டரில் தீப்பிடித்து மளமளவெனப் பரவிவிட்டது,” என அந்தப் பெண் கூறியுள்ளது போலீசாரையே அதிர வைத்துள்ளது.

​தனது மகனுடன் ஆட்டோவில் வந்து, ஐஸ்கிரீம் கடையில் நின்றிருந்த ஒரு இளைஞரிடம் வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு இந்தச் செயலைச் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளவே நினைத்ததாகவும், ஆனால் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது அங்கு நின்றிருந்தவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இந்தத் தீ விபத்தில் ஒரு கார் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இது பாதுகாப்பு குறைபாட்டைக்காட்டுவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஜகத்சிங்பூர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.