உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் ஃபதேபூர் காவல் எல்லைக்குட்பட்ட காதர்ஹேரி பகுதியில், சிறுவன் ஒருவனை நபர் ஒருவர் இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சிறுவனை ஒரு நபர் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, நடுரோட்டில் வைத்து பெல்ட்டால் சரமாரியாக வெளுத்து வாங்குவதோடு, கால்களால் எட்டி உதைக்கும் கொடூரக் காட்சிகளும் பதிவாகியுள்ளன. அந்தச் சிறுவன் வலியால் துடித்தபடி, தனது இரு கரங்களையும் கூப்பி, தன்னை மன்னித்து விடும்படி அழுது கெஞ்சிய போதிலும், அந்த நபர் சிறிதும் இரக்கமின்றி தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தக் கொடூரமான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு சிறுவனுக்கு எதிராக இத்தகைய பொதுவெளியில் கொடூரமான வன்முறையைப் பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரியப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த வன்முறைச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.