நல்ல வேலை, சொந்த வீடு, சொகுசு கார் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு அமெரிக்காவிற்குப் குடியேறிய இந்திய என்ஆர்ஐ தம்பதி ஒன்று, தங்களுக்குத் தெரியாமலேயே சுமார் 8.4 கோடி ரூபாய் கடனில் மூழ்கிய வினோத பின்னணி தற்போது சோசியல் மீடியாவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தங்களது 22 வயதில் அமெரிக்கா சென்ற இந்த தம்பதியினர், இன்ஸ்டாகிராமில் @moneyharmony123 என்ற கணக்கின் மூலம் தங்களது அதிர்ச்சியூட்டும் கடன் கதையைப் பகிர்ந்துள்ளனர். அங்குச் சென்ற புதிதில் சொந்த வீடு வாங்குவது, கிச்சனை புதுப்பிப்பது, விடுமுறையைக் கழிக்க உல்லாசமாகச் சுற்றுலா செல்வது மற்றும் முதலீட்டிற்காகப் வாங்குவது என அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும் அப்போது சரியானதாகவே தோன்றியுள்ளது.
View this post on Instagram
ஆனால், ஒவ்வொரு புதிய வாங்குதலின் போதும் இஎம்ஐ (EMI) மற்றும் புதிய கடன்கள் மளமளவென ஏறிக்கொண்டே சென்றதை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். ஒருநாள் மொத்தமாக அமர்ந்து தங்களது வரவு செலவுக் கணக்கைப் பார்த்தபோதுதான், தங்களது தலைக்கு மேல் சுமார் 8.5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8.4 कोटी ரூபாய்) கடன் மலைபோல குவிந்திருப்பதை அறிந்து ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இதில் வீடு வாங்குவதற்காக 4 கோடி ரூபாயும், முதலீட்டு சொத்துக்காக 2.7 கோடியும், கிச்சன் வேலைகளுக்காக 1.5 கோடியும், கிரெடிட் கார்டு பாக்கியாக மட்டுமே 30 லட்சம் ரூபாயும் கடன் இருப்பது தெரியவந்துள்ளது.
தாங்கள் திட்டமிட்டு இந்தக் கடனை வாங்கவில்லை என்றும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நினைத்ததால் இது சிறுகச் சிறுகச் சேர்ந்துவிட்டதாகக் கூறும் இந்த தம்பதியினர், தற்போது கவலைப்படாமல் அடுத்த 1200 நாட்களுக்குள் முழுமையாகக் கடன் இல்லாதவர்களாக மாறப் போவதாக அதிரடி சபதம் எடுத்துள்ளனர்.
அதற்காகத் தங்களது பட்ஜெட் திட்டங்கள் மற்றும் செலவைக் குறைக்கும் வழிகளைச் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் இவர்களது வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பலருக்கும் ஒரு மிகச்சிறந்த நிதிப் பாடமாக அமைந்து வருகிறது.
