கோடை விடுமுறையில் பாக்கெட் மணி சம்பாதிப்பதற்காக வேலைக்குச் செல்லும் ஒரு மாணவனுக்கு,  எதிர்பாராதவிதமாகத் தன் கையில் ஒரு மாபெரும் புதையல் சிக்கினால் எப்படி இருக்கும்? பெல்ஜியத்தில் 18 வயது மாணவன் ஒருவனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அங்குள்ள கட்டுமானப் பணியின் போது சுவருக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 90 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் அவனுக்குக் கிடைத்துள்ளது.

‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, பெல்ஜியத்தின் சிண்ட்-கிலிஸ்-டெண்டெர்மோன்டே நகரில் உள்ள ஒரு பழைய மது ஆலை இருந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. கோடை விடுமுறையைக் கழிக்கச் சென்ற கோபே என்ற 18 வயது மாணவன் அங்கு தினக்கூலி வேலைக்குச் சென்றுள்ளான். அங்கு கழிவுநீர்க் கால்வாய்க்காக நிலத்தைத் தோண்டும் பணியில் அவன் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் தன் மண்வெட்டியின் அடியில் ஏதோ வித்தியாசமான பொருள் சிக்கியிருக்கிறது.

தொடக்கத்தில் கோபே மற்றும் அவனுடன் வேலை செய்த தொழிலாளர்களுக்கு அவை சாதாரண 1 யூரோ நாணயங்கள்தான் என்று நினைத்துள்ளனர். ஆனால், மேலும் ஆழமாகத் தோண்டி மண்ணை விலக்கிப் பார்த்தபோது அவர்களின் கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை. அங்கு செங்கற்களால் மூடப்பட்ட பழைய நிலவறையின் சுவருக்குப் பின்னால் தங்கத்தின் பிரம்மாண்டக் குவியல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தங்கப் புதையலில் ஏராளமான தங்க நாணயங்கள், தங்கம் கட்டிகள் மற்றும் தங்கத் துண்டுகள் இருந்தன. தொல்பொருள் மற்றும் வரலாற்று நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, இந்தப் புதையலின் மொத்த மதிப்பு சுமார் 90 லட்சம் யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 90 கோடி ரூபாயாகும். விசாரணையில், இந்த இடம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அப்பகுதியில் தொழிற்சாலை உரிமையாளராக இருந்த தியோபிலஸ் வான் ஆஷே என்பவருக்காக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. வரலாற்றுப் பக்கங்களை ஆய்வு செய்ததில், அந்தப் பழைய மது ஆலை 1899 முதல் 1970 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்துள்ளது.

இந்தத் தங்கத்தை எளிய பாதுகாப்பற்ற பெட்டகத்தில் வைக்காமல், யாராலும் கண்டுபிடிக்க முடியாதவாறு செங்கல் சுவர்களுக்குப் பின்னால் மிகவும் தந்திரமாகப் பூட்டி வைத்துள்ளனர் என்பது அதிகாரிகளின் கணிப்பாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் ஆச்சரியமான கண்டுபிடிப்பிற்குப் பிறகு, கோபே மற்றும் அவனது தோழர்கள் எந்தத் தாமதமும் இன்றி  உடனடியாகக் காவல்துறையினருக்கும், கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்கும் நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தற்போது பாதுகாப்பு நலன்களைக் கருதி, மீட்கப்பட்ட அனைத்துத் தங்கமும் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தத் தங்கப் புதையல் ஏதேனும் பழைய திருட்டு வழக்குடனோ, குற்றச் செயல்களுடனோ அல்லது வாரிசுகள் அற்ற சொத்து விவகாரத்துடனோ தொடர்புடையதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய தொகை கைக்கு மாறியுள்ள நிலையில், இதன் உண்மையான சட்டப்பூர்வ உரிமையாளர் யார் என்பது குறித்த நீண்ட மற்றும் சிக்கலான சட்டப் போராட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.