இந்தியாவின் தலைநகரான புதுடெல்லிக்குத் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்த கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல பயணக் கட்டுரையாளரான (Travel Creator) ஸ்டீவ், அங்கு தனக்கு நேர்ந்த ஏமாற்றங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘ஜெட்லாக் வாரியர்ஸ்’ (Jetlag Warriors) என்ற பெயரில் இயங்கி வரும் ஸ்டீவ், டெல்லியில் தங்கியிருந்தபோது ஒவ்வொரு நாளும் தங்களை ஏமாற்றவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் தொடர் முயற்சிகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் வியாபாரிகள் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி சிரித்துக்கொண்டே பொய் சொல்வதாகவும், அங்கு பொய் பேசுவது என்பது பேரம் பேசுதலின் ஒரு கலாச்சார விதிமுறையாகவே மாறிவிட்டது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். டெல்லி தந்த கசப்பான அனுபவத்தால், இனிமேல் இந்தியா பக்கமே வரக்கூடாது என்ற எண்ணம் தனக்குத் தோன்றியதாகவும் அவர் அந்த வீடியோவில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Steve, Ivana, & baby Jean (@jetlagwarriors)

டெல்லியில் ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் வட பகுதிக்கும் தெற்குப் பகுதிக்கும் இடையே கலாச்சார ரீதியாகப் பெரிய வேறுபாடுகள் இருக்கும் என்ற தனது மனைவியின் ஆலோசனையின் பேரில், ஸ்டீவ் தனது குடும்பத்துடன் மும்பைக்குப் பயணம் செய்துள்ளார். மும்பை சென்றடைந்த சில நிமிடங்களிலேயே அங்குள்ள சூழல் டெல்லியை விட முற்றிலும் மாறுபட்டு, தங்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, மும்பையில் உள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை மிகவும் கண்ணியமாக நடத்தியதாகவும், சவாரி வர மறுத்துவிட்டால் அதற்கு மேல் வற்புறுத்தாமல் அமைதியாகச் சென்றுவிடுவதாகவும் ஸ்டீவ் பாராட்டியுள்ளார். டெல்லியில் பணத்தை எடுக்கவே பயந்த தனக்கு, மும்பை ஓட்டுநர்களின் இந்த எளிய நேர்மையான அணுகுமுறை இந்தியாவின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுத்துள்ளதாக அவர் தனது புதிய பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.