மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில், மக்களின் நம்பிக்கையையும் பயத்தையும் மூலதனமாகக் கொண்டு நடக்கும் ஒரு அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மகன்களின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, 71 வயது மூதாட்டி ஒருவரை ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகன்களின் உயிருக்கு ஆபத்து என்று சொன்னதும் பதறிப்போன அந்த மூதாட்டி, மந்திரம் சொல்லித் தருகிறோம் என்று வாலிபர்கள் சொன்னதை நம்பி, தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்துள்ளார். அவர் கண் மூடி மந்திரம் சொல்வதற்குள், நகைகளுடன் அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் அளித்த புகாரின் பேரில், மாதவ் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நம்பிக்கையைச் சிதைக்கும் இத்தகைய கொடூரர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
