மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள  நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரோலி மேம்பாலம் அருகே நடந்த இந்த விபத்தில், மாருதி சுசூகி டிசையர் கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் ஏறி நின்றது. விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

விபத்தில் சிக்கிய கார் பலத்த சேதமடைந்த நிலையில், சாலைத்தடுப்பு மீது சிக்கியபடி காணப்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உதவ முயன்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த விபத்து தொடர்பான வீடியோவை விக்ரோலிகர் என்ற சமூக வலைதளப் பக்கம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. அதில், “ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை விக்ரோலி மேம்பாலத்தில் தடுப்பின் மீது கார் உள்ளது. தயவுசெய்து மெதுவாகவும் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்டுங்கள்” என எச்சரிக்கை பதிவிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவலை வெளியிடவில்லை. மேலும், விபத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.