கணவனைத் துண்டு துண்டாக வெட்டி டிரம்முக்குள் அடைத்த முஸ்கான் ரஸ்தோகி முதல், வருங்கால கணவர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்த சோனம் ரகுவன்ஷி, சியா கோயல் வரை, சமீபகாலமாகப் பெண்கள் தங்களது கள்ளக்காதலர்களுடன் இணைந்து பார்ட்னர்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2025 மே 23 அன்று இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி மேகாலயா பள்ளத்தாக்கில் நடத்திய அதே மரண விளையாட்டை, கடந்த 2026 ஜூன் 18 அன்று புனேயைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் சியா கோயல் தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலுக்கு எதிராக அரங்கேற்றியுள்ளார்.
அமெரிக்காவில் எம்பிஏ முடித்துவிட்டுத் தந்தையின் தொழிலைக் கவனித்து வந்த 26 வயது கேதனுக்கும் சியாவிற்கும் வரும் நவம்பரில் 14 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், குடும்பத்தினரின் கட்டாயத் திருமண அழுத்தத்தால் ஆத்திரமடைந்த சியா, ஜூன் 18 கேதனின் பிறந்தநாளன்று அவரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார்.
மகாபலேஷ்வரில் பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த கேதனை, அவரது தாயாரிடம் வீடியோ காலில் பேசி கெஞ்சி, லோஹ்காட் கோட்டைக்குத் தனது நண்பர்களுடன் சியா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கோட்டையின் உச்சியில் கேதன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, சியா அவரைப் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு, போலீசாருக்குத் தானே போன் செய்து விபத்து போல நாடகமாடியுள்ளார்.
ஆனால், புனே போலீசாரின் தொழில்நுட்ப விசாரணையில் சியாவின் கள்ளக்காதலன் சேத்தன் சவுத்ரி கடும் பயங்கர வெயிலிலும் ‘ஹூடி’ (Hoodie) ஆடை அணிந்து கோட்டைப் பகுதியில் கேதன்-சியா ஜோடியை நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகள் சிக்கின. விசாரணையில், சேத்தன் சவுத்ரியுடன் இணைந்து சியா இந்த கொலையைச் செய்தது உறுதியானது. இந்தச் சம்பவம், 2025-ல் மேகாலயாவில் ஹனிமூன் சென்ற இடத்தில் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்ற சோனம் ரகுவன்ஷியின் கொலை வழக்கோடு அப்படியே ஒத்துப்போகிறது. சோனம் தனது கள்ளக்காதலன் ராஜ் குஷ்வாஹா மூலம் 3 கூலிப்படையினரை ஏவி, கணவனின் ஜிபிஎஸ் லொகேஷனைத் தொடர்ந்து பகிர்ந்து கொடூரமாகக் கொலை செய்ய வைத்தார்.

பின்னர், கணவனைக் கடத்திவிட்டதாகக் கூறி உத்தரப் பிரதேச தாபா ஒன்றில் அழுது நாடகமாடினார். உள்ளூர் வழிகாட்டி மற்றும் போன் கால் ஆதாரங்கள் மூலம் மேகாலயா போலீசார் சோனத்தைக் கைது செய்தனர். குடும்பத்தினரின் கட்டாயத் திருமண அழுத்தத்தால் காதலை மறைத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஆண்களை இத்தகைய பெண்கள் கொடூரமாகப் பலிவாங்கியுள்ள சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன.
