உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா கேப் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் மாற்று மின்சார வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், அங்கிருந்த சொசைட்டி ஊழியரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி வீடியோவில், அந்தப் பெண் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அங்கு பணிபுரியும் கமல் என்ற ஊழியரை 23 முறை கன்னத்தில் அறைவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

தனது ஆண் நண்பர் அமித் என்பவருடன் சொசைட்டி பராமரிப்பு அலுவலகத்திற்குச் சென்ற அந்தப் பெண், அங்கு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்துள்ளார். அப்போது கமல் கூறிய ஏதோ ஒரு வார்த்தையால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவரைத் தாக்கத் தொடங்கியதோடு, சம்பவத்தை விலக்க வந்த மற்ற ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். இந்த 1 நிமிடம் 15 வினாடிகள் கொண்ட வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அமைதியை சீர்குலைத்தது மற்றும் ஊழியரைத் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் அந்தப் பெண் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில், அந்த ஊழியர்தான் முதலில் தங்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட பெண் தரப்பிலும் புகார் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.