புனே நகரின் பிரபல தொழிலதிபர் விஷால் அகர்வாலின் மகன் கேதன் அகர்வாலுக்கும், மற்றொரு தொழிலதிபரின் மகளான சியா கோயல் என்பவருக்கும் வரும் நாட்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனை புக் செய்யப்பட்டு, உறவினர்களை அழைத்துச் செல்ல இரண்டு தனி விமானங்களுடன் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் திருமண ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வந்தன. இதனிடையே, தனது வருங்கால மனைவி சியா கோயலின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக கேதன் அகர்வால் அவரோடு லோஹ்காட் கோட்டைக்கு டிரெக்கிங் சென்றுள்ளார்.
அங்கு எதிர்பாராதவிதமாக கேதன் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் அது விபத்தல்ல, சியா கோயல் தனது காதலன் சேத்தன் சவுத்ரி மற்றும் நண்பர்களின் உதவியோடு கேதனை திட்டமிட்டு பள்ளத்தாக்கில் தள்ளிக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த அதிர்ச்சித் திட்டம் தொடர்பாக சியா கோயல், சேத்தன் சவுத்ரி உட்பட மொத்தம் 8 பேர் மீது போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த கொடூரக் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்களை மாவட்ட எஸ்பி சந்தீப் சிங் கில் தலைமையிலான போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல், சேத்தன் சவுத்ரியுடன் காதல் இருந்துள்ளது. முன்னதாக, இவர்கள் இருவரும் மற்றொரு ஜோடியுடன் பாலி தீவிற்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், கேதனின் பாஸ்போர்ட் மட்டும் மர்மமான முறையில் காணாமல் போனதால் அவரால் செல்ல முடியாமல் போயுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கேதனை லோஹ்காட் கோட்டைக்கு வரவழைத்து, சேத்தன் சவுத்ரி மற்றும் சியா கோயல் இணைந்து அவரை ஒரு பொருளால் தாக்கி, பின்னர் பள்ளத்தாக்கில் தள்ளியுள்ளனர். இதுகுறித்து பேசிய கேதனின் தந்தை விஷால் அகர்வால், “திருமணம் பிடிக்கவில்லை என்றால் நேரடியாக மறுத்திருக்கலாம், நாங்கள் திருமணத்தை நிறுத்தியிருப்போம். ஆனால், 26 வயதான என் மகனை இவ்வளவு கொடூரமாகக் கொன்றுவிட்டார்கள்.
சியாவின் காதல் விவகாரம் தெரிந்தும் எங்களை ஏமாற்றிய அவளது குடும்பத்தினரையும் இந்த வழக்கில் சேர்த்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
