மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ்  கட்சிக்குள் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனரும் நடப்பு தலைவருமான மம்தா பானர்ஜியை தலைவர் பதவியில் இருந்து அதிருப்தி பிரிவினர் அதிரடியாக நீக்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான இந்த அதிருப்திக் குழு, தங்களுக்கு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கணிசமான ஆதரவு இருப்பதாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜியின் மிக நெருங்கிய கூட்டாளியும், கொல்கத்தாவின் முன்னாள் மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இந்த கிளர்ச்சி முகாமில் இணைந்துள்ளது மம்தா தரப்பிற்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டமன்றத்தில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த அதே திங்கட்கிழமையன்று, இந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கூடி இந்த அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.

தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், மாவட்டத் தலைவர்கள், கவுன்சிலர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்ற இந்தச் சிறப்பு அமர்வில், 30 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேசிய செயற்குழு அமைக்கப்பட்டது. மேலும், தங்களது அமைப்பே ‘உண்மையான’ திரிணாமூல் காங்கிரஸ் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். 1998-ஆம் ஆண்டு மம்தா பானர்ஜியால் தொடங்கப்பட்ட கட்சியின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், குரல் வாக்கெடுப்பு மூலம் எம்.எல்.ஏ. அருப் ராய் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் ஃபிர்ஹாத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ரத்தின் கோஷ், சபினா யாஸ்மின் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ரிதாப்ரதா பானர்ஜி, ஜாவேத் கான், சந்திபன் சாஹா ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும், அக்ருஸ்ஸமான் அன்சாரி பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் மேற்கு வங்க அரசியல் களம் திகைப்பில் ஆழ்ந்துள்ளது.