உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து ரிஷிகேசுக்கு நேற்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்தப் பேருந்து, ஹரித்வாரின் மொடிதூர் மேம்பாலத்தைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த கார் ஒன்று பேருந்து மீது மோதுவது போல் வேகமாக வந்துள்ளது.
அப்போது சாதுரியமாகச் செயல்பட்ட பேருந்து ஓட்டுநர், பெரும் விபத்து ஏற்படாமல் இருக்கத் தகுந்த நேரத்தில் பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தி மோதலைத் தவிர்த்தார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாகப் பேரபாயத்திலிருந்து தப்பினர்.
இதையடுத்து, பேருந்தை விட்டு இறங்கிய ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்த முயன்ற காரைத் தடுத்து நிறுத்தி, அதன் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேருந்து ஓட்டுநருடன் சேர்ந்து பேருந்தில் இருந்த சில பயணிகளும் காரை ஓட்டி வந்த நபரிடம் கேள்வி எழுப்பினர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கடும் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், பேருந்து ஓட்டுநரை நோக்கிக் காரை வேகமாக இயக்கி அவரை நேரடியாக மோதிக் கொலை செய்ய முயன்றார். இருப்பினும், பேருந்து ஓட்டுநர் சற்றே விலகியதால் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த உடனே கார் ஓட்டுநர் அங்கிருந்து காரோடு தப்பிச் சென்ற நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய நபரைக் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
