கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய டிக்சன் (27). மீன்பிடி தொழிலாளியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரது ஆபாசக் காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் படங்களை வைத்து மாணவியை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, அந்த ஆரோக்கிய டிக்சன் மாணவியின் ஆபாசப் புகைப்படங்களை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையப் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆரோக்கிய டிக்சன் மீது போக்சோ சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஆரோக்கிய டிக்சனைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பிளஸ்-2 மாணவியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.