திமுக மற்றும் பாஜக இடையே நேரடி கூட்டணி இருப்பதாகத் தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

​சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “அரசியலில் பல கட்சிகளுக்குச் சென்று வந்துள்ள சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு திமுகவை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. அவர் பாஜக, அதிமுக எனப் பல்வேறு கட்சிகளில் இருந்துவிட்டு இப்போது தவெகவில் இணைந்துள்ளார். நாளை நடிகர் தனுஷோ அல்லது அண்ணாமலையோ புதிதாகக் கட்சி தொடங்கினால் கூட, முதல் ஆளாகச் சென்று உறுப்பினர் அட்டை வாங்குவதுதான் அவரது வழக்கம்.

​இன்னும் எத்தனை கட்சிகளுக்கு அவர் செல்வார் என்றே தெரியவில்லை. இதுபோன்ற நபர்களைப் பக்கத்தில் சேர்க்க வேண்டாம் எனத் தவெக தலைவர் விஜய்க்கு நான் அறிவுறுத்துகிறேன்” என்று கிண்டலாகவும் காரசாரமாகவும் விமர்சித்தார்.

​திமுக ஆட்சியையும் அதன் செயல்பாடுகளையும் விமர்சித்த சி.டி.ஆர். நிர்மல் குமாரின் கருத்துக்கு, ஆர்.எஸ்.பாரதி அளித்த இந்த அதிரடிப் பதிலடி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.