உலகளவில் 23 கோடிக்கும் அதிகமான பெண்கள், மருத்துவத் தேவைகளின்றி அவர்களின் பிறப்புறுப்புகள் சிதைக்கப்படும் வேதனையான நடைமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மற்றும் பெண்களின் உடல்நலத்திற்கு மிகக் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் இந்த வழக்கத்தினால் அதிகப்படியான இரத்தப்போக்கு, நோய்த்தொற்றுகள், பிரசவக் சிக்கல்கள் மற்றும் வாழ்நாள் முழுவதுமான மன உழைச்சல் ஏற்படுகின்றன. இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் கொலம்பியா நாடு தற்போது ஒரு விரிவான சட்டத்தை அங்கீகரித்துள்ளது. லத்தீன் அமெரிக்காவிலேயே FGM-க்கு எதிராக இத்தகைய வலுவான சட்டத்தைக் கொண்டுவந்த முதல் நாடாகக் கொலம்பியா திகழ்கிறது.
கொலம்பியாவில் 2020 முதல் 2026 ஜூலை வரை பதிவான 240 பெண் உறுப்பு சிதைப்பு வழக்குகளில் 87% பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான சம்பவங்கள் 6 வயதிற்கும் குறைவான சிறுமிகளுக்கு நடந்துள்ளன. இதனால், கொலம்பியாவின் புதிய சட்டம் இந்த நடைமுறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான மருத்துவ ஆதரவை வழங்குவதையும், சமூக ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த பழக்கத்தை முழுமையாக ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, FGM நடைமுறையானது ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கினியா, எகிப்து, மாலி, ஜிபூட்டி மற்றும் நைஜீரியா ஆகியவற்றில் மிகவும் தீவிரமாக உள்ளது. பாதிக்கப்பட்ட 23 கோடிப் பெண்களில் சுமார் 14.4 கோடி பேர் ஆப்பிரிக்காவையும், 8 கோடிப் பேர் ஆசியப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள். இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், சில குறிப்பிட்ட சமூகக் குழுக்கள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கையுடைய மக்களிடையே இந்த ஆபத்தான முறை தொடர்கிறது.
உலக அளவில் 92 நாடுகள் பெண் உறுப்பு சிதைப்புக்கு எதிராக நேரடி அல்லது மறைமுகத் தடைகளை விதித்துள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல நாடுகளிலும் இதற்கான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் குறிப்பாக ‘தாவூதி போஹ்ரா’ சமூகத்தினிடையே இத்தகைய சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. சட்டங்கள் இருந்தபோதிலும், சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுதல் மற்றும் திருமணப் பாரம்பரியம் என்ற தவறான மூடநம்பிக்கைகள் காரணமாகவும் குடும்ப அழுத்தத்தினாலும்தான் இந்த கொடூரப் பழக்கம் இன்னும் பல இடங்களில் இரகசியமாகத் தொடர்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 45 லட்சம் சிறுமிகள் பெண் உறுப்பு சிதைப்பு ஆபத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொலம்பியா இயற்றியுள்ள புதிய சட்டம் உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. சட்டம் இயற்றுவதோடு நிற்காமல், சமூகத்தின் வேரளவில் உள்ள அறியாமையை அகற்றுவதும், சிறுமிகளின் உடல் சார்ந்த உரிமைகளையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதும் மட்டுமே இந்த வேதனையான பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே தீர்வாகும்.
