1947-ல் இந்தியா அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றபோது, டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட நாட்டின் முதல் தேசியக் கொடி தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நெய்யப்பட்டது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல் சான்றுகளுடன் வெளிவந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 1932-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் நகராட்சித் தலைவராகப் பணியாற்றிய ஆர். வெங்கடாசலத்தை அன்றைய மத்திய அரசு அதிகாரி ஒருவர் அணுகியுள்ளார். நாடு சுதந்திரம் அடைவதைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் விநியோகிப்பதற்காகச் சுமார் 1 கோடி தேசியக் கொடிகளைத் தயாரித்துத் தருமாறு அவருக்குப் பெரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
குறைந்த கால அவகாசமே இருந்தபோதிலும், ஆர். வெங்கடாசலம் தலைமையில் குடியாத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் இரவு பகலாக உழைத்து தேசியக் கொடிகளை நெய்யத் தொடங்கினர்.
பொதுமக்களுக்கான கொடிகள் தவிர, டெல்லி செங்கோட்டையில் ஏற்றுவதற்காகவே 12 அடி அகலமும் 18 அடி நீளமும் கொண்ட 3 பிரம்மாண்டமான கொடிகள் சிறப்புத் துணியில் நெய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு கொடியைத்தான் 1947 ஆகஸ்ட் 15 அன்று நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் ஏற்றி வைத்தார்.
குடியாத்தம் நெசவாளர்களின் இந்த தேசப்பணியைப் பாராட்டி, 1947 ஆகஸ்ட் 12-ம் தேதியே பிரதமர் நேரு அலுவலகத்தில் இருந்து ஆர். வெங்கடாசலத்திற்குப் பாராட்டு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் அங்கிருந்து அனுப்பப்பட்ட மற்றொரு பிரம்மாண்டக் கொடி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்டு, அது இன்றும் அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
