உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆன்மீக நகரங்களான ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த ‘தார்’ வாகனம் ஒன்று மாணவர்கள் பயணித்த பேருந்து மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மலைப் பகுதியின் வளைவுகளும் பரபரப்பான போக்குவரத்து நெரிசலும் நிறைந்த இந்தச் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் பேருந்தின் மீது பலமாக மோதியதில் பேருந்தில் பயணித்த பல மாணவர்கள் காயமடைந்தனர். விபத்தின் தீவிரத்தை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே வேகமாகப் பரவி வருகிறது.
அதிவேகமே இந்த விபத்திற்குக் முதன்மை காரணம் என்று கூறப்படும் நிலையில், மோதிய வேகத்தில் பேருந்தின் ஒரு பகுதியும் ‘தார்’ வாகனத்தின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தன. விபத்து நடந்த உடனே அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் விரைந்து செயல்பட்டு, பேருந்திற்குள் அலறியபடி இருந்த காயமடைந்த மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், காயமடைந்த மாணவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தராகண்ட் மாநிலக் காவல்துறையினர், விபத்துக்கு உள்ளான வாகனங்களைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலைப் பாதைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் வாகனங்களை இயக்கும் போது ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடனும் வேகக் கட்டுப்பாட்டுடனும் செல்ல வேண்டும் என்பதை இந்த விபத்து மீண்டுமொருமுறை நமக்கு எச்சரிக்கையாக உணர்த்துகிறது.
