ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விழாவில் மேடையில் நின்று அவர் நீண்ட நேரமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென தடுமாறி ஒரு பக்கமாக சாயத் தொடங்கினார். இதனால் அங்கு இருந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் கீழே விழும் நிலையில் இருந்ததை கவனித்த அவரது பாதுகாப்புப் படையினர் உடனடியாக அவரை தாங்கிப் பிடித்தனர். இதனால் அவர் மேடையில் கீழே விழுவது தவிர்க்கப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் அங்கு ஏற்பட இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நின்றபடி உரையாற்றியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் நின்று பேசியதால் திடீரென பலவீனம் ஏற்பட்டதாகவும், ரத்த அழுத்தம் குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் அமைச்சரை பரிசோதித்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் அமைச்சர் மேடையில் தடுமாறிய காட்சிகள் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
