உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், மனிதநேயத்தை உலுக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உணவு டெலிவரி செய்வதில் ஏற்பட்ட மிகச்சிறிய தாமதம் மற்றும் அதனை பிளாட்டின் மேல் மாடிக்கு வந்து வழங்க வேண்டும் என்ற விவகாரம், இறுதியில் பயங்கர மோதலாக வெடித்துள்ளது. டெலிவரி ஏஜென்ட்டை நடுவழியில் தாக்கியது மட்டுமின்றி, அவரை வலுக்கட்டாயமாகத் தன் வீட்டிற்குள் இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி  கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அதாவது மீரட்டின்  கங்காசாகர் காலனி பகுதியில் அமைந்துள்ள ‘கங்கா ஹைட்ஸ்’  அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட உணவு டெலிவரி செயலி மூலம் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு வழங்க டெலிவரி ஏஜென்ட் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றுள்ளார். உணவு கொண்டு வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது; இதனால் டெலிவரி பாய்க்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தொலைபேசியிலேயே கடுமையான வாக்குவாதமும் சண்டையும் எழுந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Deccan Herald (@deccanherald)

டெலிவரி பாய் சம்பந்தப்பட்ட பிளாட்டின் அருகில் சென்றதும், ஆத்திரத்தின் உச்சியில் இருந்த அந்த வாடிக்கையாளர் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனடியாகத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார். வைரலான சிசிடிவி காட்சிகளில், டெலிவரி பாய் வந்தவுடன் அந்த நபர் அவரைத் தள்ளிவிட்டு சரமாரியாகத் தாக்குவது தெளிவாகத் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த நபரின் மனைவி, சண்டையை விலக்கிவிடாமல் மாறாகத் தன் கணவனைத் தூண்டிவிட்டுள்ளார். டெலிவரி பாயை வீட்டிற்குள் இழுத்து வருமாறு அவர் கூற, உடனே அந்த நபர் டெலிவரி ஏஜென்ட்டின் தலைமுடியைப் பிடித்து வலுக்கட்டாயமாகத் தன் பிளாட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அங்கே வைத்து மீண்டும் அவரைப் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்து, அதிர்ச்சியில் உறைந்த நிலையில் இருந்த அந்த டெலிவரி பாய், உடனடியாக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கே நடந்த அனைத்தையும் விவரித்து, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மீது அவர் புகாரைத் அளித்தார். மேலும், இந்தச் சம்பவத்தின் முக்கிய ஆதாரமாக 3 நிமிடங்களுக்கு மேல் பதிவான சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் அவர் வழங்கினார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட பாவன்பூர் காவல்துறையினர், உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ள காவல்துறை அதிகாரிகள், அதன் அடிப்படையில் குற்றவாளியைக் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நியாயமான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.