ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் மனைவி தாய் வீட்டுக்கு வந்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், அவரது தாயை மருமகன் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹவுசிங் போர்டு காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லலிதா தேவி என்ற பெண் வீட்டில் இருந்தபோது, அவரது மருமகன் சோனு அங்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சோனு, லலிதா தேவியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் கோட்வாலி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, லலிதா தேவியின் மகள் லட்சுமி போலீசாரிடம் கூறிய தகவல்கள் குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. சோனுவுக்கும் லட்சுமிக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு சோனு தன் மீது தொடர்ந்து சந்தேகப்பட்டதாகவும், மது அருந்திவிட்டு தகராறு செய்து தன்னை தாக்கியதாகவும் லட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத் தகராறால் மனமுடைந்த லட்சுமி, தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மனைவி தாய் வீட்டுக்கு வந்ததில் சோனு கோபத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாக லலிதா தேவியுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் கொலைக்கான முழுமையான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.