பிகார் மாநிலம் பிகார்ஷரீஃப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை மாற்றப்பட்டதாக எழுந்த புகார் தற்போது அதிர்ச்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவினாஷ் குமார் என்பவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்பட்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அவர்களிடம் பெண் குழந்தையை ஒப்படைத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தை தங்களுடையது அல்ல என சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, குழந்தையின் தந்தை அவினாஷ் குமார் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, சுமார் 5 மாதங்களுக்கு முன்பு அவினாஷ் குமாரின் மனைவி மற்றும் மருத்துவமனை ஒப்படைத்த பெண் குழந்தையிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

டிஎன்ஏ பரிசோதனை முடிவில், மருத்துவமனை ஒப்படைத்த பெண் குழந்தை அந்தத் தம்பதியின் உயிரியல் குழந்தை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தை மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது குழந்தை கடத்தல் தொடர்பான சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் போலீஸாரின் முந்தைய விசாரணை குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. தொடர்புடைய தனியார் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய நாலந்தா மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாலந்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், அந்தத் தம்பதிக்கு பிறந்ததாக கூறப்படும் உண்மையான ஆண் குழந்தை தற்போது எங்கே உள்ளது என்பதையும் கண்டறிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.