சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாதிக்கப்பட்ட பெண் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், அரசு இயந்திரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் திமுக அரசு செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஒருபுறம் பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், மறுபுறம் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என விளம்பர விழாக்கள் நடத்துவது வேடிக்கையானது என்று விமர்சித்துள்ளார்.
தமிழகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்த அவல ஆட்சியை மக்கள் அரியணையில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டார்கள் என்றும் வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
