உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தங்களது பகுதியில் உள்ள சாக்கடைப் பிரச்சனையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பிஜேபி கவுன்சிலர் ஒருவர் தனது பிறந்தநாளைச் சாக்கடைக்குள் நின்று கேக் வெட்டிக் கொண்டாடிய வினோத போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லங்டே கி சௌகி அனுமன் கோவில் அருகே உள்ள திறந்தவெளி சாக்கடைக் கால்வாய் பல வருடங்களாகச் சீரமைக்கப்படாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த பிஜேபி கவுன்சிலர் கிஷன் நாயக், முழங்கால் அளவு சாக்கடைத் தண்ணீருக்குள் இறங்கி, அங்கேயே பிறந்தநாள் கேக் வெட்டி தனது நூதன போராட்டத்தைப் பதிவு செய்துள்ளார். மழைக் காலம் நெருங்கி வரும் வேளையில், இந்தத் திறந்தவெளி சாக்கடையால் தண்ணீர் தேங்குதல், கொசுத் தொல்லை மற்றும் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கவுன்சிலர் கிஷன் நாயக் குற்றம் சாட்டியுள்ளார்.
Kishan Nayak, a BJP councillor in Agra could be seen celebrating his birthday in a sewer. Local standing in knee deep sewer gathered around the table as Nayak cut cake. He claims municipal corporation officials dodge his open sewer and sanitation complaints. pic.twitter.com/W6TFqxov7u
— Piyush Rai (@Benarasiyaa) June 26, 2026
கடந்த 3 ஆண்டுகளில் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு 30-க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியும் அதிகாரிகள் தங்களது கோரிக்கையை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டதாக அவர் சாடினார். மேலும், இதே சாக்கடைக் கால்வாயில் விழுந்து ஏற்கனவே இரண்டு குழந்தைகளும், ஒரு விவசாயியும் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொரு குழந்தையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆக்ரா மாநகராட்சி அதிகாரிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார்.
