மும்பையின் மரோல் பகுதியில் உள்ள ‘பிட்னஸ் பாஸ்’ (Fitness Boss) என்ற ஜிம்முக்குள், வியாழக்கிழமை மாலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை 5 மணியளவில் கனகியா ரெயின்ஃபாரஸ்ட் வளாகத்திற்கு அருகில் உள்ள செங்குத்தான சரிவான சாலையில் கார் இறங்கிக் கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

சாலையில் கீழே வந்ததும் இடதுபுறமாகத் திரும்ப வேண்டிய கார், வேகம் குறையாமல் நேராகச் சென்று ஜிம்மின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. ​இந்தக் கோர விபத்தின்போது, ஜிம்மின் வரவேற்பறையில் (Reception) அமர்ந்திருந்த 21 வயதான சானியா கான் என்ற இளம் பெண் மீது கார் பலமாக மோதியுள்ளது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்த செவன்ஹில்ஸ்-மரோல் சாலை எப்போதும் கடுமையான போக்குவரத்து மற்றும் செங்குத்தான சரிவைக் கொண்டது என்பதால், இங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விபத்து குறித்து ஜிம் நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், டிரைவரின் அலட்சியமா அல்லது காரின் பிரேக் ஃபெயிலியரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.