அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிபா உலகக்கோப்பை 2026 (FIFA World Cup 2026) தொடருக்கு இடையே, போர்ச்சுகல் அணியின் இளம் மிடில்ஃபீல்டர் ஜோவா நெவ்ஸ் குட்டி முதலை ஒன்றை பார்த்து பயந்து நடுங்கிய வீடியோ இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி துவம்சம் செய்தது. இந்த மேட்ச்சில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களையும், நுனோ மென்டிஸ், ரஃபேல் லியோ ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
இந்த மாஸ் வெற்றிக்குப் பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில், போர்ச்சுகல் வீரர்கள் ஜாலியாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. போர்ச்சுகல் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், அங்கிருந்த நபர் ஒருவர் குட்டி முதலை ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு ஜோவா நெவ்ஸ் அருகில் வருகிறார். முதலையின் வாய் பலத்த பாதுகாப்புக்காகத் டேப்பால் சுற்றப்பட்டிருந்த போதிலும், அதைப் பார்த்து ஜோவா நெவ்ஸ் பயத்தில் பின்வாங்கியுள்ளார்.
João Neves a fazer novos amigos 😂🐊 #VaiDarPortugal | #FIFAWorldCup pic.twitter.com/uSgznFcNUF
— Portugal (@selecaoportugal) June 25, 2026
பின்னர் அங்கிருந்தவர்கள் அதன் வயிற்றுப் பகுதியைத் தொட்டுப் பார்க்கச் சொன்னதும், பயத்துடனேயே கையை நீட்டி முதலையின் வயிற்றைத் தொட்டுவிட்டு, உடனே கியூட்டாகச் சிரித்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்து களம் பரபரப்பாக இருக்கும் வேளையில், போர்ச்சுகல் வீரர்களின் இந்த ஜாலியான ஆஃப்-ஃபீல்டு வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
