நான்கு ஆண்டுகளாகக் காதலித்து, இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்த சூழலில், எதிர்பார்க்காத தருணத்தில் அரங்கேறிய இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உரைய வைத்துள்ளது. தனது காதலி, வேறொரு நண்பரின் காரில் ஒன்றாகப் பயணிப்பதைக் கண்ட அந்த இளைஞர், அதிர்ச்சியிலும் வேதனையிலும் நிலைதடுமாறியுள்ளார்.
இதனால் காரை உடனடியாக நிறுத்தி விளக்கம் கேட்க வேண்டும் என்ற பதற்றத்தில், வேகமாகச் சென்று கொண்டிருந்த காரின் பொன்னட் மீது பாய்ந்து ஏறியுள்ளார். ஆனால், காரை ஓட்டிச் சென்ற நபரோ வாகனத்தை நிறுத்தாமல், சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அந்த இளைஞரை இழுத்துச் சென்று கொடூரமான முறையில் விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.
காதலன் காரின் மீது தொங்கிக்கொண்டிருப்பதை அறிந்தும், காரை நிறுத்தாமல் மேலும் வேகத்தை அதிகரித்துச் சென்ற அந்த ஓட்டுநரின் இரக்கமற்ற செயல், அப்பகுதியில் இருந்த மக்களை உலுக்கியுள்ளது. சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர், காரில் இருந்து நழுவி கீழே விழுந்து, சக்கரங்களில் சிக்கிப் பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் நம்பிக்கையின் பெயராலும், காதல் என்ற உணர்வாலும் பிணைக்கப்பட்டிருந்த ஒரு வாழ்க்கை, சில நிமிடக் கோபத்தாலும் அலட்சியத்தாலும் இப்படித் துடிதுடித்து முடிந்த காட்சி காண்போரின் நெஞ்சைப் பிளப்பதாக அமைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த கொடூரச் சம்பவத்திற்குக் காரணமான காரை ஓட்டிச் சென்ற நபர் மற்றும் காரில் இருந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாள் காதலும், திருமணக் கனவுகளும் சில நிமிடங்களில் ரத்தக் களரியாக முடிவுக்கு வந்த இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம், மனித உறவுகளின் சிக்கலையும், உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகளின் கொடூரமான விளைவையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.
