தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அதே புள்ளியில் இருந்துதான் இன்றைய தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிப் படையும் உதயமாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அதிமுக தலைமை மறந்துவிட்டதா என்று வினவியுள்ள அவர், எடப்பாடி பழனிசாமி அவர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்பு உண்மையை உரக்கப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போது திமுகவின் ஊதுகுழல் போலத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பேசுவதாக நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.

​இந்த மாற்றத்திற்கு ‘தடுமாற்றம்’ என்று பெயரிட்டுள்ள நாஞ்சில் சம்பத், மக்கள் தலைவர் யார் என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார். தெரியாதது போல நடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அந்த உண்மை உள்ளூரத் தெரியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஓங்கி வளர்ந்துள்ள ஒரே தலைவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான் என்பதை மிக விரைவில் காலம் புரிய வைக்கும் என்று தனது அறிக்கையில் நாஞ்சில் சம்பத் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்