“நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கிறோம்.. சினிமா மோகத்துல என்னனே தெரியாம ஓட்டு போட்டா இன்னும் பெரிய பிரச்சனை வரும்” என நடிகர் சாய் தீனா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சூசகமாக விமர்சித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேடையில் இருக்கும் தன்னை ஒரு நடிகன் என்பதற்காக மக்கள் கை தட்டுவதை சுட்டிக்காட்டி, “நான் என்ன செஞ்சேன்னு உங்களுக்கு தெரிஞ்சு கை தட்டுனீங்கன்னா நீங்க அறிவுள்ள பிள்ளைகள்; ஆனால் என்னனே தெரியாம கை தட்டி, ஓட்டு போட்டீங்கன்னா அது நம்மை 100 வருஷம் பின்னாடி கொண்டு போய் நிறுத்திடும்” என்று ஆவேசமாக எச்சரித்தார்.

சாதி, மதம் மற்றும் சினிமா புகழைப் பார்த்து வாக்களிக்கும் சமூகங்கள் ஒருபோதும் ஜெயிக்காது என்றும், காந்தியும் அம்பேத்கரும் நமக்காக பல நூறு, ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்றிற்காக போராடினார்கள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தனது பேச்சில் மிக உருக்கமாகக் குறிப்பிட்டார்.

அதிகாரிகளைப் பார்த்து கை தட்டாமல் நடிகர்களைப் பார்த்து கை தட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய சாய் தீனா, “நான் படிக்காதவன், எனக்கு அந்த கவலை இருக்கு; என் பிள்ளையை எப்படியாவது படிக்க வச்சிடணும்னு தான் நினைக்கிறேன்” என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

எந்தவொரு அரசியல் தலைவரையும், முன்னாடி வந்து நிற்பவனையும் முழுமையாக ஆய்வு செய்து, கல்விக்கும் வாக்குக்கும் மதிப்பு கொடுக்கத் தவறினால் சமூகம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று அவர் விடுத்த எச்சரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் தளபதி விஜய் மற்றும் த.வெ.க-வினரை குறிவைத்து பேசப்பட்டதாகக் கூறி நெட்டிசன்களிடையே அனல் பறக்கும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

“>