மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ஓமன் மற்றும் குஜராத்தை இணைக்கும் பிரம்மாண்டமான ஆழ்கடல் எரிவாயு குழாய் திட்டத்தை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.
சுமார் 30 ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டு, தொழில்நுட்ப மற்றும் நிதிச் சிக்கல்களால் முடங்கிக் கிடந்த இந்தத் திட்டம், தற்போது ‘சேஜ்’ குழுமத்தின் ஆய்வுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகவுள்ள இந்த 2,000 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய், உலகின் மிக ஆழமான கடல்வழி எரிவாயு பாதைகளில் ஒன்றாக அமையவுள்ளது.
இந்தத் திட்டம் நிறைவடையும் போது, ஹார்முஸ் நீர்சந்தி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நெருக்கடி குறையும். கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் அமையவுள்ள இந்தக் குழாய், ஆளைவிட கடினமான பொறியியல் நுணுக்கங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
இது இந்தியாவுக்குத் தேவையான இயற்கை எரிவாயுவை தடையின்றி வழங்குவதுடன், ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிசக்தி வர்த்தகத்தில் ஒரு புதிய நேரடிப் பாதையை உருவாக்கி, நாட்டின் எரிசக்தி தன்னிறைவுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
