இந்தியாவில் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி (Water Tank) இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிது. கருப்பு அல்லது வெள்ளை நிற பிளாஸ்டிக் தொட்டிகளையோ அல்லது சிமெண்ட் தொட்டிகளையோ மக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் அமைத்திருப்பர். ஆனால், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வீட்டு மாடிகளில் இப்படிப்பட்ட தண்ணீர் தொட்டிகள் ஏன் இருப்பதில்லை என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான காரணங்கள் இதோ

இந்தியாவின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே தண்ணீர் வருவதால், மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக மொட்டை மாடியில் தொட்டி அமைத்துத் தண்ணீரைச் சேமித்து வைக்கின்றனர். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் அதிநவீன நீர் விநியோகக் கட்டமைப்பு (Modern Water Distribution System) உள்ளது. அங்கு குழாய்கள் மூலம் எப்போதும் தடையின்றி, அதிவேக அழுத்தத்துடன் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாகப் பல அடுக்கு மாடி கட்டிடங்களுக்கும் தண்ணீர் நேரடியாகச் சென்றடைவதால், தனியாக மாடியில் தொட்டி வைக்கத் தேவையிருப்பதில்லை.

வெளிநாடுகளில் மாடியில் தொட்டி வைக்காததற்குப் பருவநிலையும் ஒரு முக்கியக் காரணமாகும். அங்கு குளிர்காலத்தில் கடுமையான உறைபனி நிலவுவதால், திறந்தவெளி மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டிகள் மற்றும் குழாய்களில் உள்ள நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறிவிடும். இதனால் குழாய்கள் வெடித்துச் சேதமடையும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக அவர்கள் நிலத்தடி நீர் அமைப்பையே பயன்படுத்துகின்றனர். மேலும், அங்கு தனித்தனி வீடுகளுக்குத் தொட்டி இல்லாவிட்டாலும், ஒட்டுமொத்தப் பகுதிக்கும் சேர்த்துப் பொதுவான இடத்தில் ஒரு பெரிய ‘வாட்டர் டவர்’ (Water Tower) அமைத்து, அதன்மூலம் ஒட்டுமொத்த குடியிருப்புக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.