தமிழக அரசியலில் நடிகர் ராகவா லாரன்ஸின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ மக்கள் இயக்கத்தில் லாரன்ஸ் இணையவுள்ளதாகவும், அதன் மூலம் திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், லாரன்ஸ் தவெக-வில் இணைவாரா அல்லது அண்ணாமலையுடன் கைகோர்ப்பாரா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தான் போட்டியிடுவது குறித்த செய்திகளுக்கு ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாகச் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் லாரன்ஸ், ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோருடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தாலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் அவர் எடுக்கப்போகும் அந்த முக்கியமான முடிவு என்னவாக இருக்கும் என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.