சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் விடுத்துள்ள பதிவில், தலைநகரின் மையப்பகுதியிலேயே இத்தகைய கொடூரம் நடந்திருப்பது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.

“விடியல் தருகிறோம்” என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுகவின் நிர்வாகத்தில், கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது வேதனைக்குரியது என்று அவர் சாடியுள்ளார்.

அரசு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தகுந்த பாதுகாப்பு ஊழியர்கள் இல்லாதது நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது என்றும், குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது அச்சம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் அவர்களே, உங்கள் ஆட்சிச் சக்கரம் யாருக்காகச் சுழல்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள அவர், பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டும் காலம் வந்துவிட்டது என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.