தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அமைப்புப் பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே முதற்கட்டமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக வரும் ஜூன் 21-ஆம் தேதி காலை 10 மணி அளவில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகளுடன் காலை 10:00 மணிக்கும், அதனைத் தொடர்ந்து காலை 11:30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

சமீபத்திய தேர்தல் கள நிலவரங்கள், உட்கட்சிப் பூசல்கள், பூத் கமிட்டி மறுசீரமைப்பு மற்றும் கட்சியின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தச் சந்திப்புகளில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.