“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தவெக-வில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் சாதியக் காரணிகள் முற்றிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதை அரசியல் ரீதியாகத் தான் வியப்புடன் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

இடதுசாரி சிந்தனையாளரான தான், தவெக-விலும் தனது அடையாளமான சிவப்புத் துண்டோடு தொடர்ந்து மக்கள் பணியாற்றிட விரும்புவதாகவும், அதற்குக் கட்சித் தலைமை அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
கொள்கை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னிறுத்தி தவெக பெற்ற இந்த மாபெரும் வெற்றி, தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த சாதிய அரசியலின் பிடியை உடைத்தெறிந்துள்ளதாகவும் சி. மகேந்திரன் தனது பேட்டியில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
