பாடிபில்டிங் மற்றும் தீவிர உடற்பயிற்சி உலகை உலுக்கும் வகையில், சமீபகாலமாக இளம் மற்றும் ஃபிட்டான பாடிபில்டர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பது உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
வெளிப்புறத் தோற்றத்திற்கு அசாத்தியமான தசை வலிமையோடும், கட்டமைப்புடனும் ஆரோக்கியமாகப் காட்சி அளிக்கும் விளையாட்டு வீரர்கள், எதிர்பாராத விதமாக இதய நோய்களால் மரணமடைவது ‘ஃபிட்னஸ் என்றால் முழுமையான ஆரோக்கியமா?’ என்ற பெரிய கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
வெளிப்புற அழகு மட்டுமே ஆரோக்கியத்தின் அளவுகோல் அல்ல என்பதையும், தீவிரமான உடற்பயிற்சிகளுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும் மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக எச்சரிக்கின்றனர். பாடிபில்டர்களின் இந்தத் திடீர் இதய முடக்கத்திற்குப் பின்னால் பல ஆபத்தான காரணிகள் மறைந்துள்ளன.
தசைகளை குறுகிய காலத்தில் வேகமாக வளர்ப்பதற்காகவும், உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து நரம்புகளைத் தூக்கி காட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டுகள், ஹார்மோன் ஊசிகள் மற்றும் சட்டவிரோத தசை வளர்ச்சிப் பொருட்கள் இதய தசைகளை அளவுக்கு அதிகமாக வீங்கச் செய்கின்றன.
இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து, இரத்த நாளங்கள் தடிமனாவதோடு, இதயத்தின் இயல்பான துடிப்பு சீர்குலைந்து திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும், போட்டிக்கு முன்பாக உடலை மிகவும் ஒல்லியாகக் காட்டுவதற்காகத் தண்ணீரை முற்றிலுமாகத் தவிர்க்கும் முறையும், அதிக அளவிலான காஃபின் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் பயன்பாடும் இதயத்திற்குப் பேரதிர்ச்சியை அளிக்கின்றன.
எனவே, உடற்பயிற்சி கூடம் செல்பவர்களும் விளையாட்டு வீரர்களும் வெளிப்புறத் தோற்றத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை, உடலின் உட்புற உறுப்புகளான இதயம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் வழங்க வேண்டும். செயற்கையான தசை வளர்ச்சிப் பொருட்கள் மற்றும் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
உடலின் அளவுக்கு மிஞ்சிய தீவிரப் பயிற்சிகளைத் தவிர்த்து, சீரான உணவு முறை, தேவையான அளவு ஓய்வு மற்றும் போதுமான உறக்கத்தைப் பின்பற்றுவதே பாதுகாப்பானது. மேலும், அவ்வப்போது முறையான இதயப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது இதுபோன்ற எதிர்பாராத உயிர்ப்பலிகளைத் தடுத்து நீண்ட ஆயுளை உறுதிசெய்யும்.
