திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டு சால்வைகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, பட்டு சால்வைகள் குறித்துச் சந்தேகம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கோவிலின் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், 2014 முதல் 2025-ஆம் ஆண்டு வரை முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டு சால்வைகள் உண்மையில் 100 சதவீதம் பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி குறித்துத் தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு கூறுகையில், “₹350 ரூபாய் மதிப்பிலான பாலியஸ்டர் சால்வையை ₹1,300 ரூபாய் எனக் கூறி பணம் பெற்றுள்ளனர். இந்த வகையில், கடந்த 2015 முதல் 2025-ஆம் ஆண்டு வரை ₹50 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது,” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட ஒரு நிறுவனமும், அதனைச் சார்ந்த துணை நிறுவனமும் மட்டுமே பட்டு சால்வைக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ளதால், அந்த ஒப்பந்தத்தைத் திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக ரத்து செய்துள்ளது.
