சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் அதிக அளவிலான சத்து மாத்திரைகளை உட்கொண்ட 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி தேவி ஸ்ரீ, 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாகச் செல்போன் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட பெற்றோர்கள் அவரைக் கண்டித்து, அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் கடும் மனவேதனையும் கோபமும் அடைந்த மாணவி தேவி ஸ்ரீ விபரீத முடிவை கையில் எடுத்துள்ளார்.
அதன்படி, வீட்டில் இருந்த 10 சத்து மாத்திரைகளை முதலில் உட்கொண்ட மாணவி, பின்னர் பள்ளிக்குச் சென்று அங்கேயும் மேலும் 20 சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளார். மொத்தம் 30 சத்து மாத்திரைகளை உட்கொண்டதால் மாணவியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி தேவி ஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
