திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கள்ளக்காதலனுக்காகத் தனது 14 வயதுச் சொந்த மகளையே பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

​திருத்தணி அருகே முருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்ற கட்டிட மேஸ்திரியும், அதே பகுதியைச் சேர்ந்த சரிதா என்ற பெண்ணும் ஒன்றாகக் கட்டிட வேலை பார்த்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சரிதாவுக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், தனது 14 வயது மகளைத் தனது கள்ளக்காதலனான ராமச்சந்திரனுக்குத் திருமணம் செய்து வைக்கச் சரிதா முயற்சித்துள்ளார். ஆனால், சிறுமிக்கு வயது குறைவாக இருந்ததால் சட்டச் சிக்கல் வரும் எனக் கருதித் திருமணத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளனர்.

​இதனிடையே, சரிதாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற மேஸ்திரி ராமச்சந்திரன், அந்த 14 வயதுச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதுகுறித்துத் தன் தாயிடம் பலமுறை புகார் கூறியும், தாய் சரிதா அதைப் பொருட்படுத்தாமல் ராமச்சந்திரனுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுமி, பள்ளியில் சோகமாகவே இருந்துள்ளார். ஒருகட்டத்தில் துணிச்சலாகச் செயல்பட்ட அச்சிறுமி, திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துத் தகவல் அளித்துள்ளார்.

​சமூக நலத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், திருத்தணி அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சிறுமி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, கட்டிட மேஸ்திரி ராமச்சந்திரன் மற்றும் சிறுமியின் தாய் சரிதா ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், நீதிபதியின் உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர். பெத்த தாயே மகளைக் கள்ளக்காதலனின் பாலியல் அத்துமீறலுக்குத் தள்ளிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.