மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியில் அமைந்துள்ள ‘ ராயல் ப்ளோரா’ குடியிருப்புப் பகுதி. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் ஐந்தரை மணியளவில், அந்த வளாகத்தின் 12-வது மாடியில் ஒரு பூனை நடைபாதைச் சுவற்றில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில், அங்கு வந்த ஒரு முதியவர் யாருமே எதிர்பாராத விதமாக அந்தப் பூனையை மிக நிதானமாக அருகில் நெருங்கி, சற்றும் தயங்காமல் அப்படியே கீழ்ப்பகுதிக்குத் தள்ளிவிட்டுள்ளார். உயரத்தில் இருந்து கீழே விழுந்த அந்த அப்பாவி விலங்கு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த கொடூரச் செயலைச் செய்த அந்த முதியவர், எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அங்கிருந்து நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கோரச் சம்பவம் குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இணையவாசிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். முதியவர் செய்த இந்த மனிதநேயமற்ற செயலைக் கண்டு ஒட்டுமொத்தக் குடியிருப்பும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. பூனையைத் தள்ளிவிட்டுவிட்டு அவர் அலட்சியமாகச் செல்லும் காட்சியைக் கண்ட பலரும், கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மனநலப் பாதிப்பு உள்ளதாகக் கூறப்படும் ஒருவரைப் பாதுகாப்பற்ற முறையில் வெளியில் விட்டது யார்? இதுபோன்ற ஆபத்தான நபர்களைக் கண்காணிக்கத் தவறியது ஏன்? என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இந்த விவகாரம் குறித்துப் பேசும் பலரும், மனநலக் குறைபாட்டை ஒருபோதும் இதுபோன்ற கொடூரச் செயல்களுக்குக் காரணமாகவோ அல்லது சாக்காகவோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், அவர் மற்றவர்களுக்குப் பெரிய அளவில் ஆபத்தை விளைவிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு முறையான சிகிச்சையும் பாதுகாப்பான கண்காணிப்பும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுபோன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவிய இந்த அதிர்ச்சி வீடியோவை நேரில் பார்த்து கொதித்தெழுந்த அந்தக் குடியிருப்புவாசிகள், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மக்களின் தொடர் எதிர்ப்பையும் அழுத்தத்தையும் அடுத்து, விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் எதற்காக நடந்தது, முதியவரின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விலங்குகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூரச் செயல்கள் இனியும் தொடராமல் இருக்கச் சட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.