1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு வீரர்களின் தியாகம் மட்டுமல்லாது, பெண் அதிகாரிகளின் பங்களிப்பும் மிக முக்கியக் காரணமாக இருந்தது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் மேஜர் யஷிகா ஹாத்வால் தியாகி மற்றும் கேப்டன் ருச்சி சர்மா ஆவர். எதிரிகளின் பீரங்கித் தாக்குதல்களுக்கு நடுவே, உயிரைப் பணையம் வைத்து களத்தில் நின்று சேவையாற்றிய இந்த இரண்டு பெண் சிங்கங்களின் அறியப்படாத வீர வரலாற்றை விரிவாகப் பார்ப்போம்.

போர் தீவிரமடைந்திருந்த நேரத்தில், கார்கில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ மருத்துவமனையில் மேஜர் யஷிகா தியாகி பணியாற்றினார். போர்க்களத்தில் படுகாயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து, அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே இவரது பிரதான பணியாக இருந்தது. அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த உடல்நிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், குண்டுமழை பொழியும் கடுமையான சூழ்நிலையிலும் நூற்றுக்கணக்கான வீரர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து மருத்துவத் துறையில் தங்களின் ஒப்பற்ற சேவையை வழங்கினார். மற்றொரு புறம், இந்திய ராணுவத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெண் அதிகாரியான கேப்டன் ருச்சி சர்மா, ‘ஏரோபேஸ்’  பயிற்சி பெற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரியவர்.

கார்கில் போரின் போது, போர்க்களத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தளவாடங்களை விரைவாகக் கொண்டு சேர்க்கும் முக்கியமான பொறுப்பை இவர் திறம்பட வகித்தார். எதிரிகளின் இலக்குகளைக் கண்காணிப்பதிலும், ராணுவப் படைகளுக்குத் தேவையான வான்வழி உதவிகளை ஒருங்கிணைப்பதிலும் இவரது பங்கு போற்றுதலுக்குரியது.

கடுமையான பனிப்பொழிவு, எந்நேரமும் வெடிக்கும் எறிகுண்டுகள் என மரணம் கண்முன்னே நின்றபோதிலும், இவ்விரு பெண் அதிகாரிகளும் காட்டிய மனஉறுதியும் தேசபக்தியும் இன்றளவும் போற்றப்படுகிறது. பெண்களால் போர்க்களத்தில் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி, இந்திய ராணுவ வரலாற்றில் தங்களது பெயர்களைத் தங்க எழுத்துக்களால் பொறித்துள்ளனர். இவர்களின் இந்த வீரம் மற்றும் தியாகம், வரும் தலைமுறைப் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாகத் திகழ்கிறது.