இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றினார். மகாராஷ்டிர மாநிலம் சாங்லியைச் சேர்ந்த 29 வயதான மந்தனா, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் என்பவருடன் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த நிலையில், கடந்த 23-ம் தேதி மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், திருமணம் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில், மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சால் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் ‘ஸ்கிரீன்ஷாட்கள்’ இணையத்தில் பரவின. இதனால், பலாஷ் உடன் இருந்த திருமணப் புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.
திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது காதல் குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது அவர், “என் வாழ்க்கையில் கிரிக்கெட்டைத் தவிர வேறு எதையும் நான் அதிகம் காதலிக்கவில்லை. இந்திய ஜெர்ஸியை அணிந்து நாட்டுக்காக விளையாடும்போது, எல்லா கஷ்டங்களும் மறந்து விடுகின்றன,” என்று கூறியுள்ளார்.
