அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவருக்கு 2002 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பிறகு, கேசவின் மனைவி சமையலில் வெங்காயம், பூண்டு சேர்ப்பதை நிறுத்திவிட்டார். இது கேசவின் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. வெங்காயம், பூண்டு இல்லாமல் சமையல் செய்வதை அவர்கள் எதிர்த்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. சண்டை முற்றியதால், கேசவின் மனைவி குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, 2013 ஆம் ஆண்டு கேசவ் விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியதுடன், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றமும் விவாகரத்தை உறுதி செய்து உத்தரவிட்டது. வெங்காயம் மற்றும் பூண்டு காரணமாக ஒரு திருமணத் தம்பதி பிரிந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
