உத்தரபிரதேச மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்ட 19 வயது மகள், தன் காதல் கணவனுடன் தான் வாழ்வேன் என்று பிடிவாதம் பிடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, காவல் நிலையத்திலேயே வைத்து அவரைப் பெத்த மகள் என்றும் பாராமல் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள நெஞ்சை உலுக்கும் ஆணவக்கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மாநிலம் பாண்டா மாவட்டம் படவுசா பகுதியைச் சேர்ந்த சத்ய குமார் என்பவரது மகள் ஷிவானிக்கும், பக்கத்து வீட்டு இளைஞரான லலித் வர்மாவுக்கும் இடையே மலர்ந்த காதல் நாளடைவில் திருமணத்தில் முடிந்துள்ளது.
பெற்றோரின் பலத்த எதிர்ப்பால் கடந்த மே 18-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட இந்த இளம் ஜோடியை, பெண்ணின் தந்தை கொடுத்த ஆள் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் போலீசார் ஜூன் 12 அன்று காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இருதரப்பு பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அந்தச் சமயத்தில், பெற்றோருடன் செல்ல மறுத்து காதல் கணவனுடன் தான் செல்வேன் என ஷிவானி திட்டவட்டமாகக் கூறியதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தந்தை சத்ய குமார், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து ஷிவானியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
காதலன் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலைய வளாகத்தையே ரத்தக் களறியாக்கிய இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பலாஷ் பன்சால் கூறுகையில், தந்தை சத்ய குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காதலுக்காகத் தன் உயிரையே பலிகொடுத்த இளம்பெண்ணின் இந்த சோகமான செய்தி தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
