அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம், அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலைக்கு முயன்றபோது, அவருடன் ஒரே அறையில் இருந்த நிக்கோலஸ் டார்டாக்லியோன் என்பவர் இந்தக் கடிதத்தைக் கண்டெடுத்ததாகக் கூறியுள்ளார்.
அதில், “நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா? விடைபெறும் நேரம் வந்துவிட்டது” என்று எழுதப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், எப்ஸ்டீனின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ விசாரணைகளில் இந்தக் கடிதம் பற்றி இதுவரை எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 10, 2019 அன்று எப்ஸ்டீன் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. அவர் தூக்கிலிடப்படவில்லை என்றும், கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்றும் சில தடயவியல் நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்தக் புதிய கடிதம் தற்போது கிடைத்துள்ள நிலையில், அவரது மரணம் குறித்த விசாரணையில் இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் மீண்டும் அமெரிக்க ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
