டெல்லியிலுள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் பிறந்த தேதியை, சி.பி.எஸ்.இ மற்றும் பள்ளிப் பதிவேடுகளில் உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-இல் எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்கும்போது பெற்றோரால் தவறுதலாக மார்ச் 23, 2010 எனப் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியை, மாணவனின் உண்மையான பிறந்த தேதியான ஏப்ரல் 23, 2010 என மாற்றி அமைக்க நீதிபதி விகாஸ் மகாஜன் தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.
மாணவனின் சேர்க்கைக்கான வயதுத் தகுதிக்காக, பெற்றோர் திட்டமிட்டே தவறான சான்றிதழைச் சமர்ப்பித்து நேர்மையற்ற முறையில் செயல்பட்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பெற்றோர் செய்த தவறுக்காகக் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்க விட முடியாது எனக் கூறிய நீதிமன்றம், அதே சமயம் தவறானத் தகவலைக் கொடுத்த பெற்றோரை தண்டிக்காமல் விட முடியாது எனக் கூறி, அவர்களுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தது.
இந்த அபராதத் தொகையை டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி நிதிக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவனின் மற்ற அனைத்து அரசுச் சான்றிதழ்களிலும் ஏப்ரல் 23, 2010 என்றே சரியான தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்புச் சான்றிதழில் தவறான தேதி இருந்தால், உயர்கல்விச் சேர்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகளில் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை உணர்ந்தே நீதிமன்றம் இந்தத் திருத்தத்தை அனுமதிக்க முன்வந்தது. சி.பி.எஸ்.இ விதிகளின்படி பள்ளியோடு பொருந்திப்போகும் திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் என்றாலும், மாணவரின் நலனைக் கருதி நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த முடிவை வழங்கியுள்ளது.
