சாலைப் பாதுகாப்பு விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் காவல்துறையினரே, விதிகளை முற்றிலும் காற்றில் பறக்கவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
View this post on Instagram
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு காவலர்கள் ஒன்றாகப் பயணிப்பதைக் காண முடிகிறது. இதில் கொடுமை என்னவென்றால், பைக்கை ஓட்டிச் சென்ற காவலர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்தார்; பின்னால் அமர்ந்திருந்த மற்ற மூன்று காவலர்களும் எந்தவித தலைக்கவசமும் அணியாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
பொதுமக்கள் யாராவது ஹெல்மெட் அணியாமலோ அல்லது இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேற்பட்டோர் பயணித்தாலோ உடனடியாக அபராதம் விதிக்கும் காவல்துறையினர், தாங்களே இப்படிச் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். “சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதானே? அல்லது காவலர்களுக்குத் தனி சட்டமா?” என்று இணையவாசிகளிடையே கடும் விவாதம் கிளம்பியுள்ளது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், போக்குவரத்து விதிகளை மீறிய அந்தச் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அதே வேளையில், இந்தச் சம்பவம் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்குப் பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது.
