மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில், காதலனைக் கொலை செய்து உடலைச் சாக்குமூட்டையில் அடைத்து வீசிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண், தனது வீட்டின் உரிமையாளருக்குக் குரல் பதிவு ஒன்றை அனுப்பிவிட்டு கொல்கத்தாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.
அந்த குரல் பதிவில் “குளியலறை குழாய் திறந்து கிடக்கிறது, உள்ளே ஒரு சடலம் உள்ளது” என்று அவர் கூறிய அதிர்ச்சியூட்டும் தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
கொலையை மறைப்பதற்காக, காதலனின் உடலை ஒரு சாக்குப்பையில் அடைத்து வைத்த அப்பெண், வீட்டைப் பூட்டிவிட்டுத் தப்பியுள்ளார். கழிவறையில் தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும், சடலம் இருப்பதை நில உரிமையாளர் உடனடியாக அறிந்து கொள்ளவும் அவர் அனுப்பிய அந்தத் தகவலின் அடிப்படையில், வீட்டு உரிமையாளர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் இக்கொடூர சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கல்யாண் காவல் துறையினர், கொல்கத்தாவிற்குத் தப்பிச் சென்ற அப்பெண்ணைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலையுண்ட நபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், கொலையின் பின்னணியில் உள்ள உண்மைத் காரணம் என்ன என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
