ஹைதராபாத் நகரிலுள்ள குல்சும்பூரா பகுதியில், 9 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற 55 வயது தேனீர் வியாபாரி ஒருவரை ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் தனது தாயாருடன் அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று, வாகன நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி, அவர் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அண்டை வீட்டார் உடனடியாகச் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

“>

இதனையடுத்து, குடியிருப்பு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் ஆய்வு செய்தபோது, அந்த நபர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாலையில் மதுபோதையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த அந்த நபரை, ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும் குடியிருப்பாளர்களும் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன், சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும், தாக்குதலில் பலத்த உள்காயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, உஸ்மானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, உயிரிழந்த நபரின் தாய் அளித்த புகாரின் பேரில், அவரை அடித்துக் கொன்ற நபர்கள் மீது காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 105-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.